சிரியாவில் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஆயிரக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். டமஸ்கஸில்
ஒன்று கூடிய இம்மாணவர்கள் ஜனநாயக ஆதரவு சக்திகளுக்கு தாம் ஒத்து ழைப்பு வழங்கப் போவதாகக் கூறியுள்ளனர். டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரம், நீதி, ஒற்றுமை. இதுவே எமது இலக்கு என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி யுள்ளனர். மனித உரிமைகளுக்கான சிரியாவின் தேசிய அமைப்பின் தலைவர் அம்மார் குராபி, மோதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஆட்சியிலுள்ள பஷர் அல் அஸதின் பாத் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி புதிய வடிவம் பெறுவதையே மாணவர்களின் ஆதரவுப் போராட்டம் எடுத்துக் காட்டுவதாக அம்மார் குராபி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரச படையினரின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. ஆயினும், புரட்சியாளர்களின் ஆர்ப்பாட் டம் தணியவில்லை. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு பல பத்திரிகை யாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவின் முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுவதாகவும் எவ்வேளையிலும் முழுமையான புரட்சி வெடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களுக் கும் அரச படையினருக்கும் இடையிலான மோதலில் அரச படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.