ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். (அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்) கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும், ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ் நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.
(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) “கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண் தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு
“நிச்சயமாக அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும் என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.
அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர் திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான் (வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
No comments:
Post a Comment