பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வந்துள்ள நீரிழிவு நோய் பாதிப்பை வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.இதனால் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 12ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 700 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களில் இந்தியர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்த 41 சதவீதம் பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது மற்றவர்களுக்கு தெரியவே கூடாது என ரகசியமாக பாதுகாத்து வருவது தெரிய வந்துள்ளது. மேலை நாட்டவர்களில் 33 சதவீதம் பேர் இதுபோல் ரகசியம் காக்கின்றனர்.
இதுகுறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் வசிக்கும் வெள்ளை இன மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆறு மடங்கு அதிகமாக "டைப் 2" நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.
நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களில் வெள்ளை இனத்தவர்களைக் காட்டிலும் ஆசிய நாட்டவர்கள் அதிகளவில் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு உள்ளாவதுடன் அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
ஆசியாவைச் சேர்ந்தவர்களில் 37 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தங்களை மனதளவில் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் 29 சதவீதம் பேர் நீரிழிவு நோயைப் பற்றி மற்றவர்களிடம் தெரிவிக்காமல் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட இதுபற்றி பேசுவதில்லை.
குறிப்பாக நண்பர்களிடம் 67 சதவீதம் பேரும், குடும்ப உறுப்பினர்களிடம் 50 சதவீதம் பேரும் இந்த விடயத்தை மறைக்கின்றனர். வெள்ளை இனத்தவர்களில் இந்த அளவு 19 சதவீதமாக உள்ளது.
மற்றவர்களின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களில் பலரும் சர்க்கரை குளூக்கோஸ் தொடர்பான பரிசோதனைக்கு ஆட்படுவதில்லை என்பதுடன் இன்சுலின் ஊசியும் போட்டுக் கொள்வதில்லை.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸ் அளவை சரியாக பரிசோதிக்க வேண்டும். இல்லையென்றால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், கண் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
No comments:
Post a Comment