Tuesday, 7 June 2011

அக்கிரமிப்பு ராணுவ தாக்குதலில் பலஸ்தீன இளைஞன் படுகாயம்

    கடந்த செவ்வாய்க்கிழமை (07.06.2011) காஸா பிரதேச பெய்ட் ஹனூன் பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேரணியை இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், பேரணியாளர் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததோடு,கையெறி குண்டுகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசிக் கடும் தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பலஸ்தீன் பொதுமக்களில் அனேகர் காயமடைந்தனர்
.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இந்த அடாவடித் தாக்குதலில் மிக மோசமாகக் காயமடைந்துள்ள பலஸ்தீன் இளைஞன் ஒருவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
20 வயதான மேற்படி இளைஞனின் கழுத்திலும் காலிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ள நிலையில், அவன் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக பலஸ்தீன் மருத்துவ சேவைப் பணிப்பாளர் அத்ஹம் அபூ ஸல்மியா தெரிவித்துள்ளார்.
முன்னொரு காலத்தில் மிகக் கடுமையான இஸ்ரேலிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, பலஸ்தீனரில் ஒரு பகுதியினர் வன்முறைப் போராட்டத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பாளர்மீது தாக்குதல் நடாத்தி வந்தனர். காலப் போக்கில் இந்நிலை மாறி, ஜனநாயக ரீதியான போராட்ட ஒழுங்குகளில் பலஸ்தீன் விடுதலைப் போராளிகளின் கவனம் திரும்பியது. அவர்கள் மக்களிடையே கருத்துக் கணிப்பு மேற்கொள்ளல்,சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல், அமைதிப் பேரணிகளை ஒழுங்கு செய்தல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கட்டவிழ்த்துவிடும் கணக்கற்ற வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருதல் முதலான செயற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
இவ்வாறு, வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து, அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதன் மூலம் தம்முடைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது,சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகத்தானதொரு போராட்ட முறையாகும். எனின், இந்த அடிப்படை மனித உரிமையைக் கருத்திற் கொள்ளாமல், கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையையே நெறிக்க முனையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் எதேச்சதிகாரப் போக்கானது சர்வதேசச் சட்டத்தை அவமதிப்பதாகவும், தெளிவான மனித உரிமை மீறலாகவும் அமைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment