Monday, 13 June 2011

உண்ணாவிரத புரட்சிகளும் சர்மிலா சானுவும் !

           ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலை என்ன?


அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! 

அதே சமயம் வெள்ளையும் சொள்ளையுமாக மேல் தட்டினரிடையே வலம் வரும் கோடிகளுக்கு அதிபதிகளானோர் வாயைத் திறந்தாலே அரசுகள் நடுங்குகின்றன. டாட்டாக்களும் அம்பானி, பிர்லாக்களும்தான் உண்மையில் நாட்டை ஆளுகின்றனர் என்ற காம்ரேட்டுகளின் நீண்டக்கால குற்றச்சாட்டுகளை நினைவில் நிறுத்துவது அவசியம்.

இதற்கான சமீபத்திய மிகப் பெரிய உதாரணங்களாக ஊழலுக்கு எதிராக திடீரென குரல் எழுப்பிய, தம் ட்ரஸ்ட் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள அன்னா ஹஸாரேவும் 1200 கோடிக்கும் மேலாக சொத்துக்களையுடைய நட்சத்திர உண்ணாவிரதப் போராட்ட நாயகனான பாபா ராம் தேவும் விளங்குகின்றனர்.

ஊழலுக்கு எதிராக இவர்கள் களம் கண்ட ஒரு வார காலத்துக்குள் நாட்டில் நடக்கும் அமளித்துமளி என்ன! மத்திய அமைச்சர்களே வரிசையில் நின்று இவர்களிடம் சமாதானம் பேசுவதென்ன! அவர்களின் முன்னும் பின்னும் தொலைக்காட்சி ஊடகங்களின் நூற்றுக்கணக்கான மின்னும் கேமிராக்களும் மைக்குகளும் வலம் வருவதென்ன! உண்ணாவிரதப் பந்தலில் அமரும் முன்னரே அவர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டதாக அரசுகள் அறிவிப்பதென்ன!
                  

இவையெல்லாம், சத்யாகிரகப் போராட்டங்களில் ஒன்றான உண்ணாவிரதப் போராட்டத்திற்குரிய சக்தி என்றும் அதற்கு அரசுகள் என்றுமே கதிகலங்கி உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பும் மக்களின் காதுகளில் இந்த ஊடகங்களும் அரசுகளும் நன்றாக  பூச்சூடுகின்றன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஏழை மற்றும் வலிமையற்றோரின் சொல் என்றுமே அம்பலமேறியதில்லை என்பதே உண்மை! இல்லையேல் கடந்த 11 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? மின்னும் தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? ஹஸாரேயும் ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?

தெரியாதோர் இப்போது தெரிந்து கொள்வதற்காக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் இதோ:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு என்ற சமூக சேவகி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆங்கிலேயனின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் கேவலமான அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குளுகுளு ஏசி, மினரல் வாட்டர், விலையுயர்ந்த கம்பளம், நூற்றுக்கணக்கான மின் விசிறிகள் முதலான சர்வ வசதிகளும் கொண்ட ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்கூடிய பந்தலில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ், தற்போது ஊடகங்களுக்கு நன்றாக தீனிபோட்டு வருவதால் பிரதமர் முதல் காபினட் அமைச்சர்கள்வரை அவர்மீது அக்கரை செலுத்தி, அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அன்னா ஹசாரே என்ற காந்தியவாதிக்கு இணையாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள, ஆயிரத்தின் மடங்கு காசை வீசுவோருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ராம்தேவின் ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் அரசியல் மட்டங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ், முறையற்ற வகையில் திரட்டிய சொத்துக்களின் மதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலத்தையே அபகரித்ததாக ஆதாரத்துடன் கூடிய வழக்கும் இவரின் நிறுவனத்திலேயே ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற பிரச்சனையும் ஏற்கெனவே நிலுவையிலிருக்கும் நிலையில்தான் ஊழலுக்கு எதிராக இக்கதாநாயகன் களமிறங்கியுள்ளது, நகைப்பின் உச்சக்கட்டம்!
வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணத்தை தேசிய உடமையாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கும் ராம்தேவுக்கு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. ரூ.500, ரூ.1000 காகித நாணயங்களைத் தடைசெய்யக்கோரும் ராம்தேவ் சாதாரண யோகா வகுப்புக்கு வசூலிக்கும் குறைந்த நுழைவுக் கட்டணமே ரூ.1000. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமச்சீரான ஊதியம் வழங்கவேண்டுமென கோரும் இக்கதாநாயகனின் நிறுவனத்தில், முறையாக ஊதியம் வழங்காததற்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வேலைக்குக் கல்தா! என்னே ஒரு சமூக உணர்வு இக்கதாநாயகனுக்கு!

ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதாவை நடைமுறைப் படுத்தக்கோரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பணபலம், ஆட்பலம், அதிகார ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்ட கதாநாயகர்களாக வலம் வரும் இந்த உத்தமப் புருசர்களுக்கு(!) இடையில், கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மூலமாகவும் டியூப் மூலமாகவும்  உணவு உட்செலுத்தப்பட்டு, தன் போராட்டத்தை மழுங்கடித்து இல்லாமலாக்க முயற்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சாதாரண ஒரு பெண் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா?

                                                                                                         இவரின் போராட்டம் கடந்த 11 ஆண்டுகளில் உலகில் பல தளங்களில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர்கள் கொண்ட கமிசனை மத்திய அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி, ஷர்மிளா சானுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, "குறிப்பிட்ட சட்டத்தில் வரம்புமீறல்கள் நடந்துள்ளதாகவும் அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என அறிக்கை சமர்ப்பித்தது.




எப்போதும் போல், எல்லா கமிசன்களையும் போல் இக்கமிசன் அறிக்கையினையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் போராட்டக்காரர்களான ராம்தேவ்களின் பின்னால் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்ற அயோக்கியத்தனம் ஊடகக் காமிராக்களின் ஆசியுடன் சிறப்பாக இங்கு அரங்கேறுகிறது.

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) கார்ப்பரேட் சாமியார் ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) அமைக்கத் தோன்றாத கமிசன் ஷர்மிளாவின் 11 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போடப்பட்டதன் மர்மம் என்ன?

விடை மிகத் தெளிவு!

ஹஸாரேயும் ராம் தேவும் கையிலெடுத்தது, நடுத்தர-ஏழை மக்களிடம் அரசின் இமேஜை நிமிடத்தில் தகர்க்க வைக்கும் ஊழல்  விஷயம். இவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டால், அரசியல்வாதிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். அதற்கு ஒப்பவே, ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இவர்களின் போராட்டத்தை மிக வேகமாக கொண்டு சேர்த்தன.

ஆனால், ஷர்மிளாவின் போராட்ட விஷயம் ஒரு குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அட்டூழியத்திற்கு எதிரானதாகும். இது எவ்வகையிலும் இந்தியாவின் பிற மாநில மக்களைப் பாதிக்கப்போவதில்லை. அவ்விஷயத்தை இந்த ஊடகங்கள் கையிலெடுத்தால், அது எந்த அளவுக்கு மக்களிடம் விலைபோகும் என்பது கேள்விக்குறியே!

இதனை உணர்ந்ததாலேயே ஷர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தக் கார்ப்பரேட் போராட்டக்காரர்களுக்கு ஊடகங்களும் கொடுக்கின்றன. அதற்கே இந்த அரசுகளும் செவிசாய்க்கின்றன. எல்லாம் வியாபார மயம்!

அடக்குமுறை சட்டங்கள் மூலம் தினசரி வாழ்வு நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த கார்ப்பரேட் சாமியார்களும் காந்தியவியாதிகளும் குரல் கொடுத்துப் பார்க்கட்டுமே பார்க்கலாம்!

இன்றைய காலத்தில் வீடுதோறும் உட்புகுந்துள்ள இணைய வசதியிலுள்ள சமூக தளங்களின் மூலம் தம் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவும் நாட்டு விசேசம் நிமிடங்களில் கைகளில் வந்துசேரும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ள நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டுப் பெருச்சாளிகளின் இந்த உண்ணாவிரத நாடகங்களுக்கு மத்தியில் அதற்குக் கூட்டு நிற்கும் ஊடக பாரபட்சத்திற்கு மத்தியில் 11 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முதலீடாகக் கொடுத்து போராடி வரும் ஷர்மிளாவின் உண்ணா விரதப்போராட்டம் இனிமேலாவது சமூகத் தளங்களில் ஒலிக்கட்டும்!

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது இப்போதும் மதிப்பும் மரியாதையும் இருந்தால், மணிப்பூரின் இரும்புப் பெண் மாண்புமிகு ஐரோன் ஷர்மிளா சானுவின் நியாயமான கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி சாய்த்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்.


  

No comments:

Post a Comment