தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 நாட்கள்தான் ஆகிறது. என்றாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நான் எற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்தபோது தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை உருவாக்கினோம்.
இதனால் மோட்டார் வாகன உற்பத்தி தொழிலிலும், அதை சேர்ந்த தொழிலிலும், எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியிலும் தமிழகம் முக்கிய இடம் பெற்றது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வகுத்த கொள்கையின் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்தன.
கடந்த முறை நான் ஆட்சியில் இருந்தபோது வெளியான புள்ளி விவரப்படி தமிழ்நாடு அரசு முதலீட்டை ஈர்த்து தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற்ற மாநிலமாக இருக்கிறது என்ற பெருமையை பெற்றது. அது போன்று மீண்டும் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறும் மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
எனவே தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வரவேண்டும். தற்போது மின்சார பற்றாக்குறை உள்ளது. மின் உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மின் பற்றாக்குறை நீங்கி தேவையை விட அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறும்.
தமிழ்நாட்டில் ஏழ்மையும், வறுமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது அரசின் லட்சியம். கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வறுமையை ஒழிக்க 15 அம்ச திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் பசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. வறுமையும் குறைந்தது. 2015-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
No comments:
Post a Comment